ஆன்மிகம்
பாலசுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், கொடியேற்றப்பட்டதையும் படத்தில் காணலாம்.

வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம்

Published On 2018-03-23 04:08 GMT   |   Update On 2018-03-23 04:08 GMT
வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடசென்னிமலையில் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 22-ந்தேதி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 12 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு காட்டுக்கோட்டைபுதூர் கரைக்காரர்கள் உள்பட பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவில் அடிவாரத்தில் உள்ள வரசித்திவிநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் வரசித்திவிநாயகர் சாமியை தோளில் சுமந்து மலைப்பாதை வழியாக மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.

மலை உச்சியில் பாலசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை, வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து கொடிமரத்தில் சேவல் கொடியேற்றி பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்தனர். கொடிமரத்திற்கு தர்ப்பப் புல் மாலை சூடி, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர்.

கொடியேற்றத்தின்போது பக்தி கோஷமிட்டு வழிபாடு செய்தனர். பாலசுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழாக்குழு சார்பில் பஞ்சாமிர்தம், அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 30-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு மூலவருக்கு பால்அபிஷேகம், ராஜ அலங்காரம், மகாதீபாராதனை, மாலை 4.45 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் பாலசுப்பிரமணிய சாமி தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News