ஆன்மிகம்

காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு

Published On 2018-03-10 03:30 GMT   |   Update On 2018-03-10 03:30 GMT
ஓயாமரி சுடுகாட்டில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சி காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் அரிசந்திர மகாராஜாவுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் பின்புறத்தில் காலபைரவர் மற்றும் சனீஸ்வரருக்கு தனியாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு தினமும் 4 கால பூஜைகளும், 2 முறை அபிஷேகமும் நடைபெறுகிறது. சுடுகாடு பகுதியில் இந்த கோவில் உள்ளதால் முதலில் பக்தர்கள் வர தயங்கினார்கள். பெண்கள் சுடுகாட்டிற்கு போகக்கூடாது என்பதை ஒரு ஐதீகமாக கருதினர். ஆனால் தற்போது இங்குள்ள காலபைரவர் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

தேய்பிறையில் வரும் அஷ்டமியில் காலபைரவருக்கு நடைபெறும் பல்வேறு வகையான அபிஷேகத்தை பார்த்து விட்டு, எள் விளக்கு, எலுமிச்சை பழம் விளக்கு, தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள், விரைவில் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஓயாமரியில் உள்ள அரிசந்திரர், காலபைரவர், சனிபகவான் கோவிலில் கடந்த ஒரு வருடமாகவே அதிக அளவில் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாசிமாத தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்துயாக குண்டத்தில் போட்டும், விளக்குகள் ஏற்றியும் வழிபாடு செய்தனர். முன்னதாக நேற்று காலை நடைபெற்ற யாகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News