ஆன்மிகம்

மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2018-02-17 03:10 GMT   |   Update On 2018-02-17 03:10 GMT
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகா மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரா கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகா மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி மலை மாதேஸ்வரா கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.

இதனிடையே மகாசிவராத்திரி விழாவையொட்டி நேற்று மலை மாதேஸ்வரா கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாதேஸ்வரா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். மேலும் மகா தேர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக புலித்தேர், பசு தேர், உத்திராட்சை தேர் ஆகியன முன்னே செல்ல மாதேஸ்வரா சுவாமி தேர் வெளிபிரகாரத்தில் வலம் வந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் பக்தர்கள் மரிக்கொழுந்து சொருகிய, வாழை பழங்களை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மகா தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாதேஸ்வரன் மலையில் குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News