ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறை புத்தரிசி பூஜை இன்று நடக்கிறது

Published On 2018-01-31 05:23 GMT   |   Update On 2018-01-31 05:23 GMT
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறை புத்தரிசி பூஜை இன்று நடக்கிறது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை வழிபாடு கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்து, தாணுமாலயசாமி சன்னதியில் வைப்பார்கள்.

பின்னர் தாணுமாலயசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்த பின்பு அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கமாகும்.

பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு சென்றால், “நெற்கதிர்கள் செழித்து வளர்வதுபோன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும்” என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதே போன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.
Tags:    

Similar News