search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suseendram"

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரைத் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை மாத தெப்பத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டமும், சப்தா வர்ண நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.

    இதனையொட்டி இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தட்டுவாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர்.

    தொடர்ந்து தெப்பக்குளத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

    3-வது சுற்றின் முடிவில் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறும்.

    ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடக்கிறது. இந்த கோவிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. சித்திரை மற்றும் மார்கழித் திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்படும். கொடியை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ ஏற்றுகிறார். அதனைத்தொடர்ந்து கொடிபீடத்துக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தினமும் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வருவர்.

    9-ஆம் திருவிழாவான வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி இரண்டு அம்பாளையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க பக்தர்கள் இழுத்து வருவர்.

    திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவானுக்கு எண்ணெய்காப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பக்தர் சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர். 
    ×