ஆன்மிகம்

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.100 கோடியில் சாமிக்கு அலங்காரம்

Published On 2017-10-19 07:01 GMT   |   Update On 2017-10-19 07:02 GMT
மத்தியபிரதேச மாநிலம் ரட்லத்தில் புகழ்பெற்ற மகாலட்சுமி கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமிக்கு ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் அலங்காரம் செய்வது வழக்கம்.
மத்தியபிரதேச மாநிலம் ரட்லத்தில் புகழ்பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமிக்கு ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் அலங்காரம் செய்வது வழக்கம்.

இவ்வாறு தீபாவளி அன்று தொடங்கி 5 நாட்கள் சாமிக்கு அலங்காரம் செய்யப்படும். இதற்காக பக்தர்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் வீட்டில் உள்ள நகைகளை வழங்குவார்கள்.

5 நாள் முடிந்ததும் ரூபாய் நோட்டுகளும், நகைகளும் அந்தந்த பக்தர்களுக்கு திரும்பி வழங்கப்படும். இந்த பணத்தையும் நகையையும் வைத்திருந்தால் வீட்டில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி நிலவும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக அலங்காரம் செய்யப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இப்போது பக்தர்கள் அதிக அளவு பணத்தையும், நகையையும் அலங்காரம் செய்ய கொடுத்துள்ளனர். இதன்படி 100 கோடி ரூபாய் நோட்டுகள் பக்தர்கள் வழங்கினார்கள். அதேபோல பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் வழங்கப்பட்டன.



அதை வைத்து சாமியை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கொடுத்த நகை-பணத்தை வைப்பதற்கு கோவில் கற்ப கிரகத்தில் இடம் இல்லை. இதனால் கற்ப கிரகத்திற்கு வெளியேயும் நகை-பணம் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிக பணம் - நகை வைக்கப்பட்டிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்ட தனி பாதுகாப்பு படையுடன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோவிலில் தலைமை பூசாரியாக சஞ்சய் இருந்து வருகிறார். அவர் ஒவ்வொரு பக்தர் தரும் பணம் மற்றும் நகை விவரத்தை குறித்து வைத்துள்ளார். பின்னர் அதன்படி அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படும்.

கோவிலில் அலங்காரம் செய்வதற்கு கொடுக்கப்பட்ட நகை-பணத்தில் இதுவரை திருட்டு போனதோ அல்லது மாயமானதோ இல்லை என்று தலைமை பூசாரி சஞ்சய் கூறினார்.
Tags:    

Similar News