ஆன்மிகம்

அழகர்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Published On 2017-08-14 03:32 GMT   |   Update On 2017-08-14 03:32 GMT
பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி மாத நிறைவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதில் ஏற்கனவே ஆடி அமாவாசை, ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம், தேரோட்டம், சந்தனம் சாத்துபடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தன.

மேலும் ஆடி மாதம் நிறைவுற்று, ஆவணி மாதம் பிறக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. அதைத் தொடர்ந்து நேற்று விடுமுறை நாள் என்பதாலும், ஆடிக்கழிவு என்பதையொட்டியும் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். பின்பு அங்கிருந்து வந்து முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியசாமியை பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று அழகர்மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர் பக்தர்கள் முதல் நாள் இரவில் வந்து தங்கி அதிகாலை மலை உச்சியில் உள்ள நூபுரகங்கைக்கு சென்று தீர்த்தமாடி வந்தனர். வெளியூரை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார்கள், வேன்கள், பஸ்களில் வந்தனர். மொத்தத்தில் அழகர்கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
Tags:    

Similar News