ஆன்மிகம்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம்

Published On 2017-08-07 03:39 GMT   |   Update On 2017-08-07 03:39 GMT
வடமதுரையில் உள்ள ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறுகிறது.
வடமதுரையில் உள்ள ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நடைபெறுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது ஆடித் தேரோட்டம் ஆகும். வழக்கமாக மாலை வேளையில் நடைபெறும் தேரோட்டம், இந்த வருடம் சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.

முன்னதாக வடமதுரை ஏழுமலையான் கோவிலில் இருந்து அழகர் கோவில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் சவுந்தரராஜபெருமாள் தேரில் எழுந்தருள்வார். தொடர்ந்து, பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா.... என்று கோஷம் முழங்க திருத்தேரை வடமதுரை தேரடி வீதியில் இழுத்து வருவர்.

தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ஸ்ரீ ராகவேந்திரா ஆன்மீக அறக்கட்டளையினர் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். அதன்பின் மதியம் 12.30 மணியளவில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து விஷேச மின் அலங் காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News