ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடப்பட்டது: 25-ந்தேதி பூச்சாட்டுதல் விழா

Published On 2017-07-22 03:57 GMT   |   Update On 2017-07-22 03:57 GMT
ஆடித்திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடப்பட்டது. இதையொட்டி வருகிற 25-ந் தேதி பூச்சாட்டுதல் விழா நடக்கிறது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். ஆனால் கோவிலின் உள் மற்றும் வெளிப்புற மண்டபங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் தற்போது அதை முழுவதும் இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கோவிலில் இந்தாண்டு ஆடிதிருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் திருப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒருசில நிகழ்ச்சிகளை தவிர்த்து ஆடிப்பெருவிழா இல்லாமல் ஆடித்திருவிழா என்ற பெயரில் விழா நடத்த கோவில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், அ.தி.மு.க.நிர்வாகிகள் யாதவமூர்த்தி, டாக்டர் சதீஸ்குமார், கோவில் உபயதாரர் சுரேஷ்பாபு, கோவில் செயல் அலுவலர் மாலா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகூர்த்தகாலில் திரளான பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டனர்.

இதனிடையே, ஆடிவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது.

அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ம் தேதி சக்தி அழைப்பும், 9, 10, மற்றும் 11-ந் தேதிகளில் பொங்கல் பிரார்த்தனை, 15-ந் தேதி பால்குட ஊர்வலம், உற்சவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்குதல் நடைபெறுகிறது.
Tags:    

Similar News