ஆன்மிகம்

எதற்காக சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும்?

Published On 2017-06-24 08:48 GMT   |   Update On 2017-06-24 08:48 GMT
கோவிலில் நிலவும் சக்தியை கிரகித்துக்கொள்ளும் பொருட்டு விபூதி பூசுகிறோம் சரி, எதற்காக சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும்? இதனால் என்ன நன்மை? என்பதை பார்க்கலாம்.
சத்குரு : சக்தியை கிரகித்துக்கொள்ளும் பொருட்டு விபூதி அணியப்படுகிறது. சந்தனத்தை குளிர்ச்சிக்காக உடலில் பூசிக்கொள்கிறார்கள். அதிக உஷ்ணம் கொண்ட உடலில் சில இடங்களில் சந்தனம் பூசினால், குளிர்ச்சி உண்டாகும். மேல் தோலுக்கும் சுகமாக இருக்கும். நமது கலாச்சாரத்தில் முடி இறக்கினால் கூட, தலையில் சந்தனத்தை குழைத்துப் பூசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதனால் தோலுக்குக் குளிர்ச்சியும், சுகமும் கிடைக்கிறது. நேரடியாக சந்தனக்கட்டையை இழைத்துப் பூசும்போது உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கிறது. பொதுவாக சந்தனத்தை நெற்றியிலும், தொண்டைக் குழியிலும் வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. உடலின் உஷ்ணம் தொண்டைக் குழியில் சேர்ந்துவிட்டால், நமக்கு உணவு ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும்.

இந்த இடத்தில் வெப்பம் சேர்ந்துவிட்டால் நமக்கு யாரைப் பார்த்தாலும் வெறுப்பு உண்டாகும். உடலில் உஷ்ணம் பல இடங்களில் உண்டாகலாம். தொப்புள் பகுதியில், மணிப்பூரகத்தில் சேர்ந்தால் ஒருவிதமான விளைவு ஏற்படும். சுவாதிஷ்டானத்தில் சேர்ந்தால் வேறு விளைவுகள் உண்டாகும். அநாகதத்தில் சேர்ந்தால் இன்னொரு விதமாக நிகழும். விசுத்தியில் சேர்ந்தால் மற்றொரு விதமான விளைவு உண்டாகும்.



வெளி உலகத்தில் மற்றவர்களோடு இணைந்து செயல்பட வேண்டியிருக்கும்போது, நாம் குளிர்ந்த தன்மையோடு இருந்தால், எந்தச் செயலும் நல்லவிதமாக நிகழும் என்று புரிந்துகொண்டதால், வியாபாரத் துறையை சேர்ந்தவர்கள் சந்தனம் பூசிக்கொள்வார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்கள் திருநீறு வைத்துக் கொள்வதைப்போல், வியாபாரம் மற்றும் தொழில்துறையில் இருக்கும் பிரிவினர் குறிப்பாக சந்தனம் வைத்துக் கொள்வார்கள்.

உடலில், உஷ்ண மிகுதியால் வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டால், சந்தனம் குழைத்து தொப்புளில் சிறிது வைத்துவிட்டால், 5 - 10 நிமிடங்களில், வயிற்றுவலி குறைவதை கவனித்திருப்பீர்கள். 5 நிமிடங்களில் உடல் குளிர்ச்சி அடைந்துவிடும்.

கோவிலில் உள்ள சக்தி ரூபங்களுக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை உபயோகிக்கும் வழக்கம் உள்ளது. அந்த சக்தி ரூபங்களுக்கு சந்தனம் சாற்றும்போது, சந்தனத்திற்கும் சக்தி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பதால் அதை எடுத்துவைத்துக் கொண்டு தினமும் உபயோகிப்பார்கள்.

சந்தனம் தவிர அதேமான பொருட்கள் அநேகம் உண்டு. ஆனால், அவை அனைத்திலும் முதன்மை இடம் வகிப்பது சந்தனம்தான். ஆனாலும் ஆன்மீக நோக்கத்தில் தீவிரமாக இருப்பவர்களுக்கு திருநீறு போதும்!
Tags:    

Similar News