ஆன்மிகம்
உற்சவ அம்மன், சிவபெருமானுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பூங்கரக ஊர்வலம்

Published On 2017-04-28 07:01 GMT   |   Update On 2017-04-28 07:01 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு பூஜை மற்றும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். ஆனால் மாசி மற்றும் சித்திரை மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது. அந்த 2 மாத அமாவாசையன்று பூங்கரக ஊர்வலம் நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு சித்திரை மாத அமாவாசையான நேற்று முன்தினம் பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கருவறையில் உள்ள அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ அம்மன், சிவபெருமான் அருகில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு 10.30 மணிக்கு கோவிலில் இருந்து பூசாரிகள் மேளதாளத்துடன் அக்னி குளத்திற்கு சென்றனர்.

அங்கு ஏற்கனவே 13 நாட்கள் விரதம் இருந்த முருகன் பூசாரி தலையில் பூங்கரகம் வைத்து, ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் நேற்று காலை 7.30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அங்கு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News