ஆன்மிகம்
கபாலீசுவரர் கோவிலில் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் நந்தி வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி

கபாலீசுவரர் கோவில் பங்குனி தேர் திருவிழா 8-ந் தேதி நடக்கிறது

Published On 2017-04-05 06:12 GMT   |   Update On 2017-04-05 06:12 GMT
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி தேர் திருவிழா வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலைவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் வீதி உலா நடந்து வருகிறது. 3-ம் நாளான நேற்று காலை திருஞானசம்பந்தருக்கு, பார்வதி தேவி ஞானப்பால் ஊட்டும் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது.

இதனையடுத்து நந்தி வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிக்கு நடக்கிறது. அன்றைய தினமே ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.


கோவில் குளத்தில் நீர் மட்டம் குறைந்து வருவதால், மணல் திட்டுகள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம்.

மறுநாள் (9-ந் தேதி) மதியம் 3 மணிக்கு 63 நாயன்மார்களோடு திருக்காட்சி நிகழ்ச்சியும், இரவு சந்திரசேகரர் பாரி வேட்டையும் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி தீர்த்தவாரியும், அன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளம் எப்போதும் நீர் நிரம்பியே காணப்படும். ஆனால் பருவமழை பொய்த்து போனதால் போதிய தண்ணீர் நிரப்பப்படாததால் குளத்தில் நீர் மட்டம் குறைந்து படித்துறைகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன.

மேலும், குளத்தின் ஒரு பகுதியில் மணல் திட்டுகள் வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளன. எனவே கோவில் குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவனடியார்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News