ஆன்மிகம்
பாரி வேட்டைக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் பூச்சப்பரத்தில் எழுந்தருளிய காட்சி.

மகா சிவராத்திரியையொட்டி கோவில்களில் பாரிவேட்டை விழா

Published On 2017-02-28 07:49 GMT   |   Update On 2017-02-28 07:49 GMT
மகா சிவராத்திரியையொட்டி திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர், கள்ளந்திரி பகுதிகளில் உள்ள கோவில்களில் பாரிவேட்டை விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கீழரத வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கப்பரை பூஜை விழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு இருந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அன்றிலிருந்து தொடர்ந்து தினமும் அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று பாரிவேட்டை நடந்தது. இதையொட்டி கோவிலிருந்து அம்மன் மேளதாளங்களுடன் அரசு மருத்துவமனை அருகே உள்ள காட்டு பேச்சியம்மன் இருப்பிடத்திற்கு சென்று வேட்டையாடினார். பின்னர் கோவிலில் அங்காளபரமேஸ்வரி, பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரியகருப்பசாமி, சங்கிலி கருப்பசாமி, அக்கினி வீரபத்திரன், இருளப்பசாமி உள்பட 21 பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமிகும்பிட்டனர். பின்னர் பூச்சப்பரத்தில், அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி காட்டு பேச்சியம்மன் கோலுவிக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சரம்பேட்டை அடுத்த அண்டமான் கிராமத்தில் உள்ள கம்பளிகருப்பசாமி கோவிலில் மாசி களரி பாரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மாலையில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் வாழைபழங்களை சூறையிட்டனர். இதேபோல பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தைகருப்பசாமி கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர் கிராமத்தின் சார்பில் பக்தர்கள் வழங்கிய வாழைப்பழங்கள் சூறையிடப்பட்டன.

கள்ளந்திரி அருகே உள்ள பொய்கைகரைப்பட்டி கிராமத்தில் மகா சிவராத்திரியையொட்டி முயல் வேட்டையாடி கடவுளுக்கு படைத்து அதை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்குவது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கமாகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொய்கைகரைப்பட்டி கிராம மக்கள் மகா சிவராத்திரிக்கு முயல் வேட்டையாட 100க்கும் மேற்பட்டோர் திருப்புவனம், திருமங்கலம், உசிலம்பட்டி, பெருமாள்மலை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று அதிகமான முயல்களை வேட்டையாடி கடவுளுக்கு படைத்து வழிபட்டு வந்தனர்.

ஆனால் வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்பதால் பொய்கைகரைப்பட்டி பொதுமக்கள் இந்த வருடம் அருகில் உள்ள அழகர்மலை அடிவாரப்பகுதியில் 4 முயல்களை, பாரம்பரிய முறைப்படி வேட்டையாடி கொண்டு வந்து பொய்கைகரைப்பட்டி மந்தையம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். வேட்டையாடப்பட்ட முயல்கறி கிராமமக்களுக்கு சம்பிரதாயப்படி வழங்கப்பட்டது. அதை அவரவர் வீட்டில் சமைத்து கடவுளுக்கு படைத்து, முன்னோர்களை வழிபாடு நடத்தினர்.

Similar News