ஆன்மிகம்

ஸ்ரீரங்கத்தில் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகள் தீர்த்த மகோத்சவம் இன்று நடக்கிறது

Published On 2017-02-17 08:53 GMT   |   Update On 2017-02-17 08:53 GMT
ஸ்ரீரங்கத்தில் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகள் 140-வது தீர்த்த மகோத்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
ஜீயர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மீது மிகுந்த பக்தி கொண்ட இவர், ஊர் ஊராக சென்று வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் தரும் காணிக்கைகளை சேகரித்து அதன்மூலம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர திருவாபரணங்களை செய்து வழங்கினார்.

ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் அணிந்து வரும் பாண்டியன்கொண்டை இவர் அளித்தது. ஆயுள் முழுவதும் பெருமாளுக்கு தொண்டு செய்த அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகள் ஸ்ரீரங்கத்திலேயே மறைந்தார். இவரது சமாதி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் உள்ளது.

அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் வழி வந்தவர்கள் மற்றும் சீடர்கள், அவரது நினைவு நாளை தீர்த்த மகோத்சவம் என்னும் பெயரில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி 140-வது தீர்த்த மகோத்சவம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று காலை ஜீயரின் சமாதியில் திருமஞ்சனம், வேத, பிரபந்த பாராயணங்கள், சுவாமிகளின் நவரத்தின கீர்த்தனைகள், பஜனை ஆகியவற்றுடன் ஆராதனை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாதர், தாயாருக்கு அவர் செய்து கொடுத்த திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Similar News