ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோவிலில் விசே‌ஷம்: ஒரே நாளில் வைகுண்ட ஏகாதசி - மாத கார்த்திகை கொண்டாட்டம்

Published On 2017-01-09 10:22 GMT   |   Update On 2017-01-09 10:22 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று ஓரே நாளில் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் முருகப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத கார்த்திகையுமாக 2 பண்டிகை நடந்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கரு வறையில் பவளக்கனிவாய் பெருமாளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல நேற்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் மடப்பள்ளி அருகே உள்ள கோவிலின் பெரியகதவு (சொக்கவாசல்) வழியாக பெருமாள் (உற்சவர்)எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் மாதம் தோறும் கார்த்திகை தினத்தன்று முருகப்பெருமான் தெய்வானை யுடன் தங்கமயில்வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வருவது வழக்கம் அதே போல நேற்று முருகப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத கார்த்திகை தினமாகும்.

வழக்கம் போல நேற்று இரவு 7 மணியளவில் தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையொட்டி நகர் வீதிகளில் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து சாமி கும்பிட்டனர். இவ்வாறு நேற்று ஓரே நாளில் பவளக்கனிவாய் பெருமாளும், முருகப்பெருமானுமாக அடுத்தடுத்து எழுந்தருளியது சிறப்பிலும் சிறப்பாக பக்தர்கள் கருதினார்கள்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாளுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை மற்றும் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளுதல் ஆகியவை நடந்தது. மேலும் உற்சவர் சயனத்தில் அருள்பாலித்தார்.

இந்த நிலையில் கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி நகர் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி திருநகர் பகுதியில் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து பெருமாளை வழிபட்டனர்.

Similar News