ஆன்மிகம்

ஒரே இடத்தில் அருள்புரியும் 16 விநாயகர்கள்

Published On 2016-09-30 08:34 GMT   |   Update On 2016-09-30 08:34 GMT
நெல்லையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் உள்பிரகாரத்தில் மூலவரை சுற்றி 16 வகையான விநாயகர்கள் அருள்புரிகின்றனர்.
நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயகப்பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தப்படி காட்சி தருகிறார். தன்னுடைய 32 தோற்றங்களில் 8-வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.

800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும். 

தேவியை மடியில் அமர்த்தி, தன் துதிக்கையை தேவியின் மீது வைத்திருக்கின்ற கோலம், பல கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆனால் அந்த உருவம் மூலவராக இருக்கின்ற இடம் இந்த ஆலயம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆலயத்தின் உள்பிரகாரத்தில் மூலவரை சுற்றி வல்லப கணபதி, சக்தி கணபதி, ருணஹரண கணபதி, ஹரித்ரா கணபதி, சித்திபுத்தி கணபதி, சர்வசக்தி கணபதி, குஷி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சுவர்ண கணபதி, விஜய கணபதி, அர்க கணபதி, வீரகணபதி, சங்கடஹர கணபதி, துர்கா கணபதி, ஹேரம்ப கணபதி, குரு கணபதி என 16 வகையான விநாயகர்கள் அருள்புரிகின்றனர் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

தேவியை மடியிலே வைத்து அருள்பாலிக்கின்ற வடிவம் உள்ள விநாயகர் திருஉருவங்கள் உள்ள வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கடஹர கணபதி மற்றும் இரு தேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி, புத்தி கணபதி ஆகிய 5 விநாயகர் பெருமான் திருஉருவ சிலைகள் உள்ள ஒரே கோவில் இதுவாகும். 

Similar News