ஆன்மிகம்

இன்று மகாளய அமாவாசை தினம்: திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Published On 2016-09-30 02:25 GMT   |   Update On 2016-09-30 02:25 GMT
மகாளய அமாவாசை தினமான இன்று திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், சங்கராபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்யவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சியில், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் பிரசித்திபெற்ற கெங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமைந்துள்ள சங்கராபரணி நதிக்கரையில் பித்ருதோஷம் நீங்க தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு ஆகும். ஆண்டு தோறும் இங்கு மாசிமக தினத்தன்று மிக விமரிசையாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் மகாளய அமாவாசை தினத்தன்று இந்த கோவிலுக்கு வந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மகாளய அமாவாசை தினத்தையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

தர்ப்பணம் கொடுப்பதற் காக வரும் பக்தர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆற்றில் குளித்து விட்டு வரும் பக்தர்களின் வசதிக்காக உடைமாற்றும் அறையும் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் மூலவர் கெங்கவராக நதீஸ்வரருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து சாமிக்கும், அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 

Similar News