ஆன்மிகம்

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

Published On 2016-06-16 04:12 GMT   |   Update On 2016-06-16 04:13 GMT
விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பூந்தோட்டம் மேட்டுத்தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 14-ம் ஆண்டு தொடக்க விழா கடந்த 13-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு சிறப்பு வேள்வி ஆரம்பமானது. 7.15 மணியளவில் மூவிலை வேல் மூர்த்திக்கு வேள்வி வழிபாடு, திறைவையாகுதி, நிறைவாகுதி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் 1,008 சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் திருக்கலசங்கள் புறப்பட்டு கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மலர் வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெற்றது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் 2 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் வாலாம்பிகை சமேத ஆதிவாலீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News