ஆன்மிகம்

இன்று வாழ்வை வளமாக்கும் பைரவர் ஜென்ம அஷ்டமி

Published On 2016-11-21 05:11 GMT   |   Update On 2016-11-21 05:11 GMT
இன்று (21-11-2016) வாழ்வை வளமாக்கும் பைரவர் ஜென்ம அஷ்டமி தினமாகும். உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறும்.
இந்து சமயத்தில் பைரவர் வழிபாடு முக்கியமானது. சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகன். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.

காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார். திரிசூல பாணியான இவர், நீலநிற மேனியுடன், நிர்வாண கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சிவாலயங்களில் வடகிழக்கு திசையில் இவருக்கு தனி சன்னிதி உண்டு. காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்த சாமபூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்று பொருள். தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, துர்மர்ணம் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவரே. அந்த அளவிற்கு பைரவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும். எதிரிகள் தொல்லை ஒழியும். யாருக்கும் அடிபணியாத, தலை குனியாத வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும். வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். இழந்த பொருள் செல்வத்தை மீண்டும் பெறலாம். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். பிதுர் தோஷம் விலகும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவருக்கு சிறு துணியில் மிளகை கட்டி நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால், வாழ்க்கையில் வளம் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அமையும். சந்தனக்காப்பு செய்து வழிபட்டால், எந்நாளும் இன்ப நாளாக அமையும்.

பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லம், பாயசம், அவல் பாயசம், உளுந்தவடை, சம்பா அரிசி சாதம், பால், பழ வகைகள் பிடித்தமானவை. அவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லஎண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்குஎண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
ஸ்வர்ணாக ர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும் வெள்ளிக் கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த ஆண்டு வரும் திங்கட்கிழமை (21-ந்தேதி) பைரவ ஜென்ம அஷ்டமி தினமாகும். இந்த தினத்தில் பைரவரை மனம் உருகி வழிபட்டால் நீங்கள் கேட்டதையெல்லாம் தருவார். ஒருவர் தனது உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறும்.

Similar News