ஆன்மிகம்

கேதுவிற்கான பரிகாரத்திருத்தலங்கள்

Published On 2016-10-01 04:06 GMT   |   Update On 2016-10-01 04:06 GMT
கேது தோஷம் நீங்க பரிகார தலங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
கேதுவிற்கு அதிதேவதையாக வேதஜோதிடத்தில் சித்திரகுப்தன் சொல்லப்பட்டிருப்பதால் ஜாதகத்தில் கேதுபகவான் சாதகமற்ற பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் உலகிலேயே சித்திரகுப்தனுக்கென்று அமைந்திருக்கும் ஒரே கோவிலான காஞ்சீபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயத்தில் உங்களின் ஜென்மநட்சத்திரம் அல்லது ஒரு செவ்வாய்க்கிழமையன்று அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. 

ராசிச்சக்கரத்தில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியே முதலாவது மூல நட்சத்திரமாக ஆரம்பிப்பதால் நம்முடைய மேலான இந்துமதத்தின் மூல முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகப்பெருமான் கேதுவின் இன்னொரு அம்சமாக கருதப்படுகிறார். எனவே கேதுதசையில் இடையூறுகளைச் சந்திப்பவர்கள் தும்பிக்கையானை நம்பித் துதிப்பதன் மூலம் கஷ்டங்களை நீக்கி கொள்ளலாம். 
ஏற்கனவே ராகுவின் பரிகாரங்களில் சொல்லியுள்ளபடி மிகுந்த அருட்சக்தி வாய்ந்த தடை நீக்கும் திருத்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கேதுவிற்கான முதன்மை பரிகாரத்தலம். அன்னை ஸ்ரீஞானப்பிரசுன்னாம்பிகை கேதுவாக இங்கே அருள் பாலிக்கிறாள். 

ஜாதகத்தில் திருமணத்தை தடை செய்யும் அமைப்பில் லக்னம் அல்லது ராசிக்கு இரண்டு ஏழு எட்டில் கேது இருப்பவர்கள் தங்களின் ஜென்மநட்சத்திர நாளுக்கு முதல்நாள் மாலையே இத்திருத்தலத்தில் தங்கி ஜென்மநட்சத்திரம் அமைந்த மறுநாள் தங்கள் தோஷத்தின் அளவிற்கேற்ப, கடுமையான தோஷம் உள்ளவர்கள் அதிகாலை ருத்ராபிஷேகத்திலும், சிறியஅளவில் தோஷம் உள்ளவர்கள் சர்ப்ப சாந்தி பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டும். 

கொடுமுடி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம். சீர்காழி பாம்புக்கோவில். சுயம்புவாகத் தோன்றிய புற்றுக்கோவில்கள், நாகவல்லி, நாகாத்தம்மன் போன்ற பெயருடைய திருத்தலங்கள் அனைத்தும் கேதுவின் தடை நீக்கும் திருக்கோவில்கள்தான்.

Similar News