சினிமா

முறுக்கு மீசையுடன் ரஜினி - புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும்

Published On 2018-10-05 06:24 GMT   |   Update On 2018-10-05 06:24 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth
‘காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட’.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கிராமத்து தோற்றத்தில் இருக்கிறார்.

ரஜினியின் பிளாஷ்பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான் இது என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது வயதுக்கேற்ற தோற்றங்களில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
‘பேட்ட’ படத்தின் இந்த போஸ்டரில் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார். ரஜினியின் 1980-90 காலகட்ட தோற்றத்தை இது நினைவுபடுத்துவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ரஜினியின் இந்த தோற்றம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. வேட்டி சட்டை தோற்றம் தேவர் மகன், வீரம் உள்ளிட்ட சில படங்களை நினைவுபடுத்துவதாகவும், மீசை சிங்கம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுபடுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரஜினியின் பின்புறம் சூரியன் இருப்பது போல் அமைந்துள்ளதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth

Tags:    

Similar News