சினிமா

கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்

Published On 2017-11-23 06:14 GMT   |   Update On 2017-11-23 06:14 GMT
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சென்னை வருவதற்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவருடைய தற்கொலை திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற முடிவை யாரும் எடுக்கக்கூடாது.

தயாரிப்பாளருக்கு எந்த பிரச்சினை இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தையும், எங்களையும் வந்து அணுகலாம்.

நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் வரி செலுத்தியும் பாதுகாப்பில்லாத துறையாக இந்த சினிமாத்துறை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.



திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்க வேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பத்மாவதி திரைப்படத்தில் நடித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அதுவும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களே இது போன்ற செயலில் ஈடுபடுவது, நாம் எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இதில் அரசு அமைதி காப்பது தவறு.

தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று எண்ணி கமல்ஹாசனும், ரஜினியும் அரசியலுக்கு வரலாம். ஆனால் வரும்போது வருவார்கள்.

கமல்ஹாசன் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றால் அதற்கு அமைச்சர்கள் ஆதாரத்தைத்தர வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமாக சந்திக்கட்டும். அதை விட்டு விட்டு மிரட்டும் வகையில் பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News