சினிமா

இது விடை காணும் வேளை - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து கமல் கருத்து

Published On 2017-09-06 14:08 GMT   |   Update On 2017-09-06 14:09 GMT
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசன் இது விடை காணும் வேளை - என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலிதா நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை, பெண் போலீசார் இழுத்துச் சென்று வெளியேற்றினர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

நீட் தேர்வை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்ததால் அவரது நினைவிடத்தில் போராட்டம் நடத்தியதாக, மாணவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்போராட்டம் குறித்து கமல் தனது டுவிட்டரில், ‘Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர். இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம் கூடியோசிப்போம். வெகுளாதீர். மதி நீதியையும் வெல்லும். என்று பதிவிட்டிருக்கிறார்.
Tags:    

Similar News