சினிமா

அரசு அனுமதி பெறாமல் ‘விவேகம்’ படத்தை திரையிட்டதால் நடவடிக்கை

Published On 2017-08-25 07:03 GMT   |   Update On 2017-08-25 07:03 GMT
அரசு அனுமதி பெறாமல் ‘விவேகம்’ படத்தை 7 காட்சிகள் திரையிட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த ‘விவேகம்‘ படம் நேற்று ரிலீஸ் ஆனது.

‘விவேகம்‘ படம் திரையிட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்கு வழகத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்ட ரசிகர்கள் காட்சிக்காக ஒரு டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்கப்பட்டது. இங்கு பாப்கான், குளிர்பானம் இலவசம் என்று கூறப்பட்டது.

இந்த டிக்கெட்டில் டிக்கெட்டின் உண்மையான கட்டணம் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று சிறப்பு காட்சியில் படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதுதவிர ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக திரை அரங்குகளில் 3 காட்சிகள் நடைபெறும். அரசு அனுமதியுடன் பண்டிகை தினங்களில் 4 அல்லது 5 காட்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் நேற்று ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி ‘விவேகம்‘ படம் சில தியேட்டர்கள் 7 காட்சிகள் வரை திரையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பல தியேட்டர்களில் அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கட்டணமும் பல மடங்கு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது-

நேற்று பல்வேறு திரை அரங்குகளில் 4 காட்சிகள் வரை திரையிட அனுமதி பெறப்பட்டிருந்தது. முறையான அனுமதி பெறாமல் 7 காட்சிகள் திரையிடப்பட்டு இருந்ததால் குழுக்கள் மூலம் ஆய்வு செய்து அந்த தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சில தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட விவரங்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட திரை அரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Tags:    

Similar News