சினிமா

‘பெப்சி’ வேலை நிறுத்தம்: சினிமா படப்பிடிப்புகள் 2-வது நாளாக பாதிப்பு

Published On 2017-08-03 05:35 GMT   |   Update On 2017-08-03 05:35 GMT
பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் சினிமா படப்பிடிப்புகள் 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.
பட அதிபர்கள், ‘பெப்சி’ தொழிலாளர்கள் மோதல் நீடித்து வருகிறது. பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக நேற்று இரண்டாவது நாளாக படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வந்த ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு நேற்றும் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.

நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் வீட்டில் முடங்கினார்கள். அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்ததால் இடத்துக்கான இரண்டு நாள் வாடகை உள்பட பல்வேறு வீண் செலவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டப்பிங், எடிட்டிங், ரீரிக்கார்டிங் பணிகளும் முடங்கி உள்ளன. விஜய்யின் மெர்சல் பட வேலைகளும் நடக்கவில்லை.

பெப்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்துவதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் வேலை பார்ப்பவர்களை அழைத்து வரும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை. பெப்சி தொழிலாளர்கள் வெளியேறியதால் வெளிமாநில தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை தடங்கல் இன்றி நடத்தினார்கள். ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் பில்லா பாண்டி படப்பிடிப்பும் வெளியாட்களை வைத்து தடங்கல் இல்லாமல் நடத்தப்பட்டது.

இந்த படப்பிடிப்பில்தான் பெப்சி தொழிலாளர்கள் பயணப்படி அதிகம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையத்தில் நடந்து வரும் சசிகுமாரின் கொடிவீரன் படப்பிடிப்பும் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

ஜாகுவார் தங்கம் இயக்கத்தில் விஜய் சிரஞ்சீவி நடிக்கும் இந்தியா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தடங்கலின்றி நடந்தது. இதுபோல் செல்வா இயக்கத்தில் அரவிந்தசாமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் சென்னை திரைப்பட நகரில் நடந்தது. படப்பிடிப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்து இருந்ததால் போலீசார் பாதுகாப்பு அளித்து இருந்தார்கள்.
Tags:    

Similar News