சினிமா

ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல தானே கோர்ட்டு அனுமதி

Published On 2017-06-13 05:13 GMT   |   Update On 2017-06-13 05:13 GMT
பணமோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் வெளிநாடு செல்ல தானே செசன்ஸ் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
பிரபல இந்த நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா இருவரும் ‘பெஸ்ட் டீல் டி.வி.’ என்ற சேனலை நிர்வகித்து வந்தனர். இந்த சேனல் மூலம் தனியார் நிறுவனங்களின் பொருளை விளம்பரப்படுத்தி அதை விற்பனை செய்து வந்தனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி பிவண்டியில் உள்ள கான்காவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா இருவரும் அவர்களது சேனல் மூலம் எனது நிறுவனத்தின் படுக்கை விரிப்புகளை விற்றுத்தருவதாக கூறினர். அதன்படி படுக்கை விரிப்புகளை அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குரிய ரூ.24 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா இருவரும் ஜாமீன் கேட்டு தானே செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவர்களுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. குறிப்பாக அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்தது.



இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி கோரி புதிதாக மனு ஒன்றை தானே செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் “தொழில் சார்ந்த வேலைகள் காரணமாக ஜூன் 12-ந்தேதியில் (நேற்று) இருந்து ஜூலை 21-ந் தேதிக்குள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டி இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்கவேண்டும்” எனவும் கூறிருந்தனர்.

இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் இருவரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஷில்பா ஷெட்டி தரப்பில் ஆஜரான வக்கீல், அவர்களின் பயணம் குறித்து முழுமையான விவரங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்யப்படுவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பது தொழில் ரீதியாக அவர்களை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார். இருப்பினும் அவர்கள் ஜூலை 21-ந் தேதிக்கு மேல் வெளிநாட்டில் தங்கக்கூடாது என தெரிவித்த நீதிபதி, வெளிநாட்டில் அவர்கள் தங்கியிருக்கும் விலாசம், தொலைபேசி எண்கள் போன்றவற்றை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News