சினிமா

மதுரை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் புதிய மனு தாக்கல்

Published On 2017-05-04 05:29 GMT   |   Update On 2017-05-04 05:29 GMT
வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் சார்பில் வக்கீல் காந்திமதிநாதன் வள்ளியூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியபோது மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்துகளை தெரிவித்ததாகவும், எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில்குமார், கமல்ஹாசனை நாளை (வெள்ளிக் கிழமை) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.



இந்த நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்கும்படி கமல்ஹாசன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், ‘யார் மனதையும் புண்படுத்தும்படி கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தான் பேசினேன். இதே சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வள்ளியூர் கோர்ட்டு நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News