ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப் லோகோ

இந்தியாவில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாத ஹீரோ மோட்டார்சைக்கிள்

Published On 2019-07-06 09:26 GMT   |   Update On 2019-07-06 09:26 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கரிஸ்மா மோட்டார்சைக்கிள் கடந்த சில மாதங்களில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் தலைமுறை கரிஸ்மா மோட்டார்சைக்கிள் 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த மாடல் அமோக வரவேற்பு பெற்று அதிகளவு விற்பனையானது. எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கரிஸ்மா மாடலில் மேற்கொள்ளப்பட்ட அப்டேட்கள் அந்நிறுவனத்திற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களில் ஹீரோ கரிஸ்மா ஒரு யூனிட் கூட இந்தியாவில் விற்பனையாகவில்லை. பிப்ரவரி 2019 முதல் இதுவரை ஒரு கரிஸ்மா யூனிட் கூட விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மோசமான விற்பனைக்காக இந்த மாடல் நிறுத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய கரிஸ்மாவின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. தற்சமயம் கரிஸ்மா மாடலை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.



இந்தியாவில் ஹீரோ கரிஸ்மா மாடல் அந்நிறுவனத்தின் முதல் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் ஆகும். பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோவின் முதல் மாடலாகவும் இது அமைந்திருக்கிறது.

பிரீமியம் சந்தையில் இதுவரை: எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் போன்ற மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ளது. மூன்று மாடல்களிலும் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 17.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஹீரோ கரிஸ்மா இசட்.எம்.ஆர். மாடலில் 223சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20 பி.ஹெச்.பி. பவர், 19 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News