செய்திகள்

சிறுபான்மை இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? என இந்தியாவுக்கு காட்டுவோம் - இம்ரான் கான்

Published On 2018-12-23 12:17 GMT   |   Update On 2018-12-23 12:17 GMT
இந்தியாவில் சிறுபான்மையினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? என இந்திய பிரதமர் மோடிக்கு காட்டுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். #Modi #treatminorities #ImranKha
இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அங்குள்ள பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இங்கு வசிக்கும் சிறுபான்மை மக்களின் நலனில் இம்மாநிலத்தை சேர்ந்த மந்திரிகள் கவனம் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட இம்ரான் கான், சமீபத்தில் இந்தி நடிகர் நசீருதீன் ஷா வெளியிட்ட ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் பசுகாவலர்கள் என்ற பெயரால் நடைபெறும் வன்முறைகள் மற்றும் சகிப்புத்தன்மையின்மை தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த நசீருதீன் ஷா, இன்றைய இந்தியாவில் எனது பிள்ளைகளின் நிலைமை எதிர்காலத்தில் எப்படி ஆகுமோ? என்று நான் கவலைப்படுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்தை நேற்று தனது பேச்சின்போது சுட்டிக்காட்டிய இம்ரான் கான், இதே கருத்தைதான் பாகிஸ்தான் பிரிவினையின்போது நமது தேசப்பிதா முகமது அலி ஜின்னா கூறியிருந்தார் என தெரிவித்தார்.



இந்தியாவில் முஸ்லிம்கள் சம உரிமை கொண்ட மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்று முகமது அலி ஜின்னா அப்போது வெளியிட்ட அச்சம் தற்போது அங்கு நடந்து வருகிறது. இதைதான் நசீருதீன் ஷா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்குள்ள சிறுபான்மையினத்தவர்களை சம உரிமை பெற்ற மக்களாக மாற்ற மந்திரிகள் உழைக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவில் சிறுபான்மையினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? என்பதை நாம் நரேந்திர மோடிக்கு காட்ட வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்த கருத்து இந்தியர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள நடிகர் நசீருதீன் ஷா, எங்கள் நாட்டில் 70 ஆண்டுகளாகவே ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. எங்களை கவனித்துகொள்ள எங்களுக்கு தெரியும். தனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிடுவதற்கு பதிலாக தங்கள் உள்நாட்டு பிரச்சனைகளை இம்ரான் கான் கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #Modi #treatminorities #ImranKhan
Tags:    

Similar News