செய்திகள்
மணமக்கள் மாட்டு வண்டியில் வந்தபோது எடுத்த படம்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதிகள்

Published On 2019-01-24 10:26 GMT   |   Update On 2019-01-24 10:26 GMT
கருங்கல் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள வகுத்தான்விளையைச் சேர்ந்தவர் பொன் ஷோஜின் ராஜ். இவர் சவுதி அரேபியாவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை பெனிற்றா என்பவருக்கும் நேற்று திக்கணங்கோடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் புதுமண தம்பதிகள் கருங்கலில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

மாலையில் அவர்கள் கருங்கல் கருமாவிளையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரண்டு காளை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தின் முன் கேரள ஆண், பெண் கலைஞர்கள் சிங்காரி மேளம் முழங்கிச் சென்றனர். புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்ததை கண்ட பொதுமக்கள் அதனை ஆச்சர்யமாக பார்த்து சென்றனர்.

மணமகனின் தந்தை ராஜா காங்கிரஸ் பிரமுகர் ஆவார். அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியதைப் போல மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். அதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மணமக்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாட்டு வண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம் என்று கூறினார்.
Tags:    

Similar News