செய்திகள்

இட ஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜனதா அரசு சதி - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2019-01-08 10:37 GMT   |   Update On 2019-01-08 10:37 GMT
இட ஒதுக்கீட்டை ஒழிக்க மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு சதி செய்துவருகிறது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:

விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.

இது உண்மையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல, ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டம் ஆகும் என சுட்டிக்காட்டுகிறோம். தேர்தல் ஆதாயத்திற்காக முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சியைக் கைவிட வேண்டுமென பா.ஜனதா அரசை வலியுறுத்துகிறோம்.

இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதல்ல பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமத்துவ நோக்கில் வழங்கப்படுவதாகும்.

இதை உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு உட்பட பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

பா.ஜனதா அரசு நீதித்துறையை மதிக்காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்.சி. எஸ்.டி., ஓபிசி இடஒதுக் கீட்டைக் கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே அதை முடக்கிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அளவு கோலை வைப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறது.

முற்பட்ட வகுப்பினருக்கு உதவுவது போல் பா.ஜனதா அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டதிருத்தம் உண்மையில் அவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டதேயாகும். பா.ஜனதா தோல்வி பயத்தில் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எவரும் ஏமாறமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News