செய்திகள்
மகா தீப விழாவையொட்டி திருவண்ணாமலை கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

மகா தீபத்தையொட்டி கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளம்

Published On 2018-11-23 08:22 GMT   |   Update On 2018-11-23 08:22 GMT
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். பவுர்ணமி நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றவாறு உள்ளனர். இன்று மதியம் 12 மணிக்கு பவுர்ணமி முடிந்தாலும் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வார்கள்.

இதனால் கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

ஆனால் அந்த மழையை பக்தர்கள் பொருட்படுத்தவில்லை. மழைக்கு நடுவே மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் அவர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவல பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கிரிவலப் பாதையில் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர்.

மகா தீபம் ஏற்றப்படும்போது கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் கிரிவலப் பாதையில் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
Tags:    

Similar News