செய்திகள்

நாட்டின் பாதுகாப்புக்கும், மக்கள் நலனுக்கும் முன்னுரிமை - அமித்ஷா தகவல்

Published On 2019-06-01 21:26 GMT   |   Update On 2019-06-01 21:26 GMT
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்புக்கும், மக்கள் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 30-ந் தேதி புதிய அரசு பதவியேற்றுக்கொண்டது. மோடியின் புதிய மந்திரி சபையில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று அவர் உள்துறை அமைச்சக பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார். இதற்காக டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக வடக்கு பிளாக் அலுவலகத்துக்கு வந்த அமித்ஷாவை உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, உளவுத்துறை தலைவர் ராஜீவ் ஜெயின் ஆகியோர் வரவேற்றனர்.

இதைப்போல உள்துறை இணை மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ள கிஷன் ரெட்டி, நித்யானந்த் ராய் ஆகியோரும் அமித்ஷாவுடன், தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.



இந்த நிகழ்ச்சிக்கு பின் அமித்ஷா தனது டுவிட்டர் தளத்தில், ‘நாட்டின் உள்துறை மந்திரியாக இன்று (நேற்று) நான் பொறுப்பு ஏற்றேன். என் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான இந்த துறையை எனக்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருந்த அமித்ஷா, மோடியின் தலைமையின் கீழ் இந்த முன்னுரிமைகளை நிறைவேற்ற என்னால் இயன்றதை செய்வேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

உள்துறை மந்திரியாக பதவியேற்றுள்ள அமித்ஷா, காஷ்மீர் விவகாரம் மற்றும் தேசிய குடியேற்ற பதிவேடு வெளியீட்டை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளை உடனடியாக கையாள்வார் என தெரிகிறது. பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பது என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகளுக்கு அமித் ஷா முக்கியத்துவம் அளிப்பார் என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News