செய்திகள்

மத்திய அரசை எதிர்த்து ராஜினாமா செய்த காஷ்மீர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ப.சிதம்பரம் பாராட்டு

Published On 2019-01-10 08:13 GMT   |   Update On 2019-01-10 08:23 GMT
மத்திய அரசின் போக்கை கண்டித்து ராஜினாமா செய்துள்ள காஷ்மீர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அறைகூவலை இந்த உலகம் கவனிப்பதாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #PChidambaram #ShahFaesalIAS
புதுடெல்லி:

ஐ.ஏ.எஸ். எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பதவிக்கு நாடு முழுவதும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் சில மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடிப்பதுண்டு.

அவ்வகையில், காஷ்மீர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதன்முதலாக முதலிடம் பிடித்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷா பைசல். மத்திய அரசுப் பணியில் இருந்த இவர் தனது பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார்.



காஷ்மீர் மாநிலத்தில் அவசியம் இல்லாமல் நடைபெறும் படுகொலைகளை கண்டித்தும், காஷ்மீர் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுகாண உண்மையான அணுகுமுறையை கடைபிடிக்காத மத்திய அரசின் மெத்தனப்போக்கை எதிர்த்தும், இந்தியாவில் உள்ள சுமார் 20 கோடி முஸ்லிம்களை ஓரம்கட்டும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக ஷா பைசல் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மோடி தலைமையிலான ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக பேசியதற்காக அவரை மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

ஷா பைசல் எடுத்த இந்த முடிவு கவலை அளிப்பதாக இருந்தாலும், இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அவரது அறிக்கையில் தெரிவித்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை போன்றது, உண்மையானது. அவரது எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் இந்த உலகம் கவனிக்கும் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், சிறப்புக்குரிய காவல்துறை உயரதிகாரி என்று பெயர்பெற்ற மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும்  பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி.யுமான ஜூலியோ ரிபெய்ரோ என்பவரும் முன்னர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட கருத்தையும் சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், நமது சொந்த மக்களிடம் இருந்துவரும் இதைப்போன்ற விமர்சனங்களுக்காக வேதனையிலும் அவமானத்தாலும் நாம் தலைகுனிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #PChidambaram #KashmirIAS #ShahFaesalIAS

Tags:    

Similar News