செய்திகள்

சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்கள் கட்டண சலுகை தொடர வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2019-04-26 20:13 GMT   |   Update On 2019-04-26 20:13 GMT
சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்கள் கட்டண சலுகை தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Ramadoss
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள ஊர்களில் வாழும் மக்களின் வணிக வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டண சலுகையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது ஆகும்.

உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு 2008-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு தான் காரணம். அப்போது அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து அந்த ஆணை இப்போது நடை முறைக்கு வந்திருக்கிறது.

உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுங்க கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.



சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்கள் என்பதால், இத்தகைய மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு சிக்கலாக மாறக் கூடும். அதை தவிர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும் உள்ளூர் வாகனங்களுக்கான 50 சதவீதம் கட்டண சலுகை ரத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss
Tags:    

Similar News