செய்திகள்

விருதுநகர் ஏ.டி.எம். மையங்களில் ரூ.17 லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் கைது

Published On 2019-02-23 11:11 GMT   |   Update On 2019-02-23 11:11 GMT
ஏ.டி.எம். மையங்களில் வைத்த பணத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் பணம் நிரப்பிய பாண்டியன் நகர் மற்றும் ராமமூர்த்தி ரோடு பகுதி ஏ.டி.எம். மையங்களை ஆடிட்டர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது 2 மையங்களிலும் சேர்த்து ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, பணம் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சக்தி கண்ணன் (வயது 28) தான் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையே பணத்தை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்ட சக்திகண்ணன் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கட்டியுள்ளார். மீதி பணத்தை கட்டாமல் இழுத்தடித்தார்.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கிருஷ்ண நாராயணன், விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பணம் மோசடி விவகாரத்தில் சக்தி கண்ணனின் தந்தை ஆண்டவர் (53) சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

அதன் பேரில் தந்தை- மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News