செய்திகள்

மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரர்கள் 2 பேரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

Published On 2019-01-10 11:27 GMT   |   Update On 2019-01-10 11:27 GMT
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க வந்த போலீஸ்காரர்களை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் ஆற்று படுகைகளில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தலை தடுத்த 2 போலீஸ்காரர்களை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி மற்றும் தைப்பாக்கம் மங்கல் கால்வாய் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் டில்லிபுபாபு, கோவிந்தவாடி பகுதிக்கு சென்றார். அப்போது பொக்லைன் மூலம் 2 வாலிபர் மணல் அள்ளி லாரிகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

இது குறித்து போலீஸ் காரர் டில்லிபாபு விசாரித்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் திடீரென லாரியை ஓட்டி போலீஸ் காரர் டில்லிபாபு மீது மோத முயன்றனர்.

உஷாரான டில்லிபாபு ஒதுங்கியதால் உயிர் தப்பினர். இதுபற்றி அவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணல் கடத்திய லாரியில் இருந்த டில்லி என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த விஜயன் என்பவர் தப்பி விட்டார். இதேபோல் தைப்பாக்கம் மங்கல் கால்வய் ஆற்றுப் படுகையில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலின்படி போலீஸ்காரர் தாமோதரன் அங்கு சென்று கண்காணித்தார்.

அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட முட்டவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் போலீஸ்காரர் தாமோதரன் மீது லாரியை ஏற்ற முயன்றார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தார்.

கைதான டில்லி, ராஜ்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News