சினிமா

நயன்தாரா பற்றி அவதூறு- ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு கண்டனம்

Published On 2019-03-26 06:42 GMT   |   Update On 2019-03-26 06:42 GMT
நடிகை நயன்தாரா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi
நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

நடிகர், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ராதாரவி தி.மு.க. கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ராதாரவிக்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ராதாரவியின் பேச்சு குறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. செய்யும் பணியை வைத்து ஒரு பெண்ணை விமர்சிப்பதையும் மரியாதை குறைவாக நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தனிமனித சுதந்திரம், உரிமை, தன்மானத்தை பாதிக்கும் எந்த வி‌ஷயத்துக்கும் தி.மு.க. துணை போகாது.’

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ராதாரவியின் பேச்சு குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்.’

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

ராதாரவியின் பேச்சு குறித்து நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்? இவர் என்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்?.’

சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் இங்கே கூச்சல் போடலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.’

நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘இதைவிடப் பெரிய வி‌ஷயம் ஒன்று இருக்கிறது. ராதாரவியாவது அவரது மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார். ஆனால், இது போன்ற வி‌ஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. இவைதானே பொள்ளாச்சி போன்ற எல்லா இடத்திலும் வெளிப்படுகிறது. அவர் பேசினது தப்பான வி‌ஷயம்.

ஆனால் அந்த தப்பான வி‌ஷயம் தானே நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் என்ன பண்ணப் போறோம். ஒரு பெண்ணாக நயன்தாரா சூப்பர் ஸ்டார் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்?. சாதிக்க வேண்டும் என வரக்கூடியப் பெண்களும் அவரை வைத்து இப்படியொரு தவறான வழிகாட்டுதலையா நாம் செய்ய வேண்டும். சினிமாத்துறையில் எத்தனை பேர் பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

ராதாரவியைத் தடைப் பண்ணினால் மட்டும் பயன் இல்லை. அங்கே இருந்தப் பெண்களே கைதட்டி சிரிக்கிறார்களே அவங்களுக்கு எப்போது தடை போடப் போகிறீர்கள்?. அவர்கள் ரசித்து சிரிச்சிட்டுத்தானே இருக்கிறார்கள்.


இந்த வி‌ஷயங்கள் மாறுவதற்குப் பெண்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பெண்களை மதிக்கத்தகுந்தவர்களாக நடத்த கண்டிப்பாக பெண்கள் வெளிவர வேண்டும்.

ஆண்கள் எப்படி காரணமாக இருக்கிறார்களோ அதே போல சில பெண்களும் இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

அதனால் முழுக்க முழுக்க ஆண்களையே குற்றம்சாட்ட வேண்டியதில்லை என நினைக்கிறேன். எதையும் சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பெண்களை கீழ்த்தரமாக காண்பிக்கும் எந்த வி‌ஷயங்களிலும் பங்கு பெறாதீர்கள். பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கும், இப்போது நடக்கும் வி‌ஷயத்துக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi

Tags:    

Similar News