search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆற்றங்கரையில் அஷ்ட நரசிம்மர்கள்!
    X

    ஆற்றங்கரையில் அஷ்ட நரசிம்மர்கள்!

    • சிங்கப்பெருமாள் கோவிலில் வீரநரசிங்கன் முக்கியத் தெய்வம்.
    • கருவறை வீரநரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீரநரசிங்கன் ஆகியோர் அனைவரும் இடதுகாலைத் தொங்கவிட்டபடி காட்சி தருகின்றனர்.

    தஞ்சை, யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்மர் கோயிலில் கருவறை வீரநரசிம்மர், ஆழியுள் அமர்ந்த நரசிம்மர், வைகுந்த நரசிம்மர், கல்யாண நரசிம்மர், விதானத்து வீரநரசிம்மர் ஆகிய ஐவரை தரிசிக்கலாம். தஞ்சை மாமணிக்கோவிலாகிய ஸ்ரீநீலமேகர் கோவிலில் அபயவரத நரசிம்மர், செங்கமலவல்லித் தாயார் சந்நிதியில் கம்பத்தடி யோக நரசிம்மர், மேலும் வலவெந்தை நரசிம்மர் ஆகிய மூவரையும் சேர்த்து ஆற்றங்கரை விஷ்ணு ஆலயங்களில் அஷ்ட (எட்டு) நரசிம்மர்களை நாம் கண்டு வணங்கலாம்.

    கருவறை வீர நரசிம்மர்

    தஞ்சை யாளி நகர் சிங்கப்பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருப்பவர் இவர். வீரம் என்ற குணத்தின் வடிவாய் இலங்குபவர். தஞ்சகாசுரன் இறுதியில் எம்பெருமானிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் தஞ்சை யாளி வீர நரசிங்கமாகவே இன்றளவும் அருள்பாலித்து வருகிறார். திருமகள், மண்மகளுடன் சேர்ந்து பரமபதத்தில் அருள்பாலித்து வரும் வைகுந்தநாதனே தஞ்சகாசுரனுக்கு மோக்ஷ நிலையில் நரங்கலந்த சிங்கமாகக் காட்சி கொடுத்தார். ஆதலால் இத்திருத்தலத்திற்கு "மோட்ச ஸ்தலம்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    ஆழியுள் அமர்ந்த நரசிங்கன்

    விண்ணாற்றங்கரையிலுள்ள விஷ்ணு ஆலயங்கள் அனைத்துமே கிழக்கு நோக்கியுள்ளன. சிங்கப்பெருமாள் கோவிலில் வீரநரசிங்கன் முக்கியத் தெய்வம். இவர் சக்கரத்தினுள் அமர்ந்துள்ளார். இவருக்குக் கீழே பிரஹலாதன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரையும் நின்ற நிலையில் நிறுவி, நடுவே யோக நரசிங்கனை அமர்ந்த கோலத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர். சிங்கப்பெருமாள்கோவில் நரசிங்கனை "தஞ்சை யாளியைப் பொன்பெயரோன் நெஞ்சமன்றிடந்தவன்'' எனத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளதை நினைவிற் கொண்டேதான் பிரஹலாதன், ஹிரண்யகசிபு ஆகிய இருவர் புடைசூழ ஆழியுள் அமர்ந்த நரசிங்கனை அமைத்திருக்கலாமெனத் தோன்றுகிறது.

    வைகுந்த நரசிம்மர்

    கருவறை வீரநரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீரநரசிங்கன் ஆகியோர் அனைவரும் இடதுகாலைத் தொங்கவிட்டபடி காட்சி தருகின்றனர். இருப்பினும் வீரநரசிங்கன் கோவிலான சிங்கப்பெருமாள் கோவிலின் கொடி மரத்தில் உபய நாச்சிமார்கள் இருமருங்கிலும் அமர்ந்தவராய் வைகுந்த நரசிம்மர், தன்னுடைய வலது காலைத் தொங்கவிட்டபடி காட்சி தருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    கம்பத்தடியோக நரசிம்மர்

    ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா உடனுறை நீலமேகப் பெருமாள் கோவிலின் தாயார் சந்நிதியில் முகமண்டபத் தூணில் தென்திசை நோக்கியவாறு கம்பத்தடி யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இவரது உருவம் காண்போரின் கண்களைக் கொள்ளை கொள்கின்றது. அவ்வகையில் அழகிய சிற்ப அமைதியுடன் அழகோடு அமைந்த யோக நரசிம்மரைத் தஞ்சை பிருஹதீச்வரர் ஆலயத்திலும் காணமுடிகின்றது. கம்பத்தடி யோக நரசிங்கன் தென்திசை நோக்க, கீழைத் திசையில் வீர ஆஞ்சநேயர் காட்சி கொடுக்கின்றார். இம்மூர்த்திகளை 108 முறை வலம் வந்தால் எண்ணியவை இனிது நிறைவேறும் என்பது தொன்று தொட்டுக் கூறப்பெறும் சிறப்புச் செய்தியாகும். தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலும் இந்த வகை நரசிம்மர் அருளாசி புரிகின்றார்.

    Next Story
    ×