search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெனிசுலா விவகாரம்- ஐநா பாதுகாப்பு சபையில் மாறிமாறி தீர்மானங்களை முறியடித்த வல்லரசு நாடுகள்
    X

    வெனிசுலா விவகாரம்- ஐநா பாதுகாப்பு சபையில் மாறிமாறி தீர்மானங்களை முறியடித்த வல்லரசு நாடுகள்

    வெனிசுலா விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபையில் கொண்டு வந்த தீர்மானங்களை வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் மாறிமாறி முறியடித்தன. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido
    நியூயார்க்:

    எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

    இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் குவைடோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இந்த நாடுகளை கடுமையாக கண்டித்துள்ள அதிபர் மதுரோ, அந்த நாடுகளிடம் இருந்து வரும் மனிதாபிமான உதவிகளை ஏற்க மறுத்துள்ளார். 

    இந்நிலையில், வெனிசுலாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்து செல்லக்கூடிய மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் ஆகிய அம்சங்கள் அடங்கிய தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. ஆனால், ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை எதிர்த்ததால் தீர்மானம் நிறைவேறவில்லை.

    15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு சபையில், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 9 நாடுகள் வாக்களித்தன. தென் ஆப்பிரிக்கா எதிர்த்து வாக்களித்தது. ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்த்தன. இந்தோனேசியா, ஈகுவடோரியல் கினியா, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

    அதன்பின்னர் வெனிசுலா விவகாரம் தொடர்பாக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரஷியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஈகுவடோரியல் கினியா ஆகிய நாடுகள் வாக்களித்தன. இதனால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. 

    ஐநா பாதுகாப்பு சபையில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளும் வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரம் கொண்டுள்ளன. ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்போது, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும், இந்த 5 நாடுகளில் எதாவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால், அந்த தீர்மானம் தோல்வியடையும் என்பது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido 
    Next Story
    ×