search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானுக்கு மாற்றாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை - நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை
    X

    ஈரானுக்கு மாற்றாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை - நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை

    ஈரானுக்கு மாற்றாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. #alternativeoilsupplies #Indiaseconomy #AliceWells
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    குறிப்பாக, ஈரான் மீது முழுமையான தடை விதிக்கப்படும் நவம்பர் 4-ம் தேதி முதல் அந்நாட்டுடன் இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய கூடாது. மீறினால், ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைக்கும் எந்த நாடாக இருந்தாலும் அந்நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனினும், அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாக உள்ளது.

    முன்னர் இருந்த அளவை விட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

    இந்நிலையில், ஈரானுக்கு மாற்றாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அரசின் தெற்காசியா மற்றும் மத்திய ஆசியா பிராந்தியத்துக்கான முதன்மை துணை உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் வாஷிங்டன் நகரில் இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஈரான் மீதான முழுமையான தடைக்கு பின்னர் உண்டாகும் பின்விளைவுகள் தொடர்பாக விவாதிப்பதற்காக நட்பு  நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

    பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் முக்கிய இடத்தில் உள்ள நமது நட்பு நாடான இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஈரானுக்கு மாற்றாக வேறு என்ன செய்யலாம்? என்பது இந்த ஆலோசனையின் மைய அம்சமாகும்’ என தெரிவித்துள்ளார். #alternativeoilsupplies  #Indiaseconomy #AliceWells
    Next Story
    ×