search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது - இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம்
    X

    எச் 4 விசாதாரர்களின் பணி அனுமதி ரத்தாகிறது - இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம்

    டிரம்ப் அரசின் எச் 4 விசாதாரர்களின் பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #H4Visa #Trump #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்.1பி விசாவில் பணிபுரிவோரின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. அதற்காக ‘எச் 4’ விசா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளி நாட்டினர் பணி புரிகின்றனர்.

    இதை எதிர்த்து அமெரிக்காவை சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் கொலம்பியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஒபாமா அரசின் இத்தகைய கொள்கை முடிவால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது உள்நாட்டு பாதுகாப்பு துறை ஆஜராகி விளக்கம் அளித்தது. அதில், ‘எச் 4’ விசாதார்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும். இதற்கான புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நிர்வாக அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த விவகாரம் குறித்து டிரம்ப் அரசு ஏற்கனவே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கோர்ட்டு விரும்பினால் ‘எச்4’ விசாவை ரத்து செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    தற்போது எச் 4 விசாவை ரத்து செய்ய வகை செய்யும் புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் தயாராகி விடும் என கோர்ட்டில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி ‘எச் 4’ விசாவில் பணிபுரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எச் 4 விசாவில் பணிபுரிய 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 விண்ணப்பங்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் 5 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள். #H4Visa #Trump #US

    Next Story
    ×