search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதித்துறைக்கு எதிரான நவாஸ் ஷரிப் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் தடை
    X

    நீதித்துறைக்கு எதிரான நவாஸ் ஷரிப் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் தடை

    வாழ்நாள் முழுவதும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகளின் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் இன்று தடை விதித்தது. #Pakistancourt #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28-7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார். 

    பாகிஸ்தான் நாட்டை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவர் பதவியில் அவர் நீடிக்கவும், அக்கட்சிசார்ந்த அவரது முடிவுகளை அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தல்களில் போட்டியிடவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் நவாஸ் ஷரிப்புக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

    இந்த தடைக்கு எதிராக நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். குறிப்பாக, தனது தந்தைக்கு எதிராக தீர்ப்பளித்த சில நீதிபதிகளை மரியம் நவாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில், நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகளின் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது.

    இதுபோன்ற கருத்துகளை கோர்ட் அவமதிப்பாக கருத வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவ்வகையில், ஆமினா மாலிக் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது. 

    இதுதொடர்பாக விசாரிக்க லாகூர் ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று நவாஸ் ஷரிப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகளின் கருத்துகளை அடுத்த 15 நாட்களுக்கு ஒளிபரப்பாமல் தடை செய்து கண்காணிக்குமாறு அந்நாட்டின் ஊடகங்கள் ஒளிபரப்பு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டனர். #tamilnews  #Pakistancourt #NawazSharif
    Next Story
    ×