search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி ஆட்சியில் விரிசல் - இலங்கை மந்திரிசபை விரைவில் மாற்றம்
    X

    கூட்டணி ஆட்சியில் விரிசல் - இலங்கை மந்திரிசபை விரைவில் மாற்றம்

    இலங்கையில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்குப்பதிவு செய்த விவகாரத்தில் மந்திரி சபையை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவும் இருந்து வருகிறார்கள். மைத்ரிபால சிறிசேனா இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்.

    இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

    சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும்கட்சி கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அமோக வெற்றி பெற்றது.

    இந்த தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கே தான் காரணம் என அதிபர் சிறிசேனா கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். அந்த கட்சியின் பல அமைச்சர்களும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரை மாற்ற வேண்டும் என்றும் போர்க்கொடியும் தூக்கினார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்மரசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்மரசிங்கே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.



    ஆனாலும், சிறிசேனா கட்சியை சேர்ந்த 12 அமைச்சர்கள், பிரதமருக்கு எதிராக செயல்பட்டனர். 6 அமைச்சர்கள் உள்பட 16 எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுபோட்டனர். பலர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர்.

    இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரணில் விக்மரசிங்கே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிபர் சிறிசேனாவிடம் வற்புறுத்தி வருகிறார். இதுசம்பந்தமாக இருவரும் கலந்து ஆலோசித்து வருகிறார்கள். இதனால் இன்னும் ஓரிரு நாளில் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிராக செயல்பட்ட பல மந்திரிகளை பதவி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். மேலும், பிரதமர் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிறிசேனா கட்சியின் மந்திரிகள் பலர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதற்கிடையே சிறிசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், சில எம்.பி.க்கள் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன கட்சியில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு சேர்ந்தால் பிரதமரின் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.

    ஆனாலும் தமிழ்தேசிய கூட்டணி கட்சி பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறது. இதனால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும் ரணில் விக்ரமசிங்கே பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆளும்கட்சி கூட்டணிக்குள்ளேயே மோதல் வெடித்திருப்பதால் இலங்கையில் பல அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. #tamilnews #srilanka
    Next Story
    ×