search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டைபோல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை
    X
    குட்டைபோல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

    குட்டைபோல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 46.85 அடியாக குறைந்தது. இதனால் அணை குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
    மேட்டூர்:

    வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு தண்ணீர் குடிநீர் தேவைக்கு ஏற்ப அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல்வாரத்தில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு கீழாக உள்ளது.

    நீர்வரத்து மிகவும் குறைந்த நிலையில் இருந்தபோதிலும் அணையின் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் 12 மாவட்ட மக்களின் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதாவது கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 25-ந்தேதி 47.65 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 46.85 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் குட்டைபோல் காட்சி அளிக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போதுள்ள நிலையை வைத்து பார்க்கும்போது ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×