search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் சிக்கியது
    X

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் சிக்கியது

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தினந்தோறும் திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு மலிண்டோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் மலேசியாவிற்கு கடத்த இருந்த இருமல் மருந்து போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மர்ம பொருளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை சோதித்தபோது போதைப்பொருள் என்பது தெரியவந்தது.

    அவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கடத்த இருந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.10 லட்சம் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் அந்த பயணியை கைது செய்து தமிழகத்தில் இந்த போதைப்பொருள் எங்கிருந்து, யாரிடம் வாங்கப்பட்டது என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×