search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தொடர் கொள்ளை: இளம்பெண் உள்பட 7 கொள்ளையர்கள் கைது
    X

    திருப்பூரில் தொடர் கொள்ளை: இளம்பெண் உள்பட 7 கொள்ளையர்கள் கைது

    திருப்பூரில் பட்டப் பகலில் காரில் சென்று வீடுகளில் கொள்ளையடித்த பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த 2 மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் படி உதவி கமி‌ஷனர் நவீன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து விசாரித்து வந்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது போலீசாருக்கு சில தடயங்கள் கிடைத்தது.

    இதன்படி விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவையை சேர்ந்த சதிஷ் குமார் (42), வேலூர் சங்கர் (36) திண்டுக்கல் வீரபாபு (21) திருப்பூர் ரமேஷ் (30), திருவாரூர் குருசக்தி (31), திருப்பூர் பலவஞ்சிபாளையம் வெங்கடேஷ் (30), அம்மாபாளையம் கீதா (29) ஆகியோர் காரில் சென்று வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் குரு சக்தி மீது தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவர் தான் கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து 80 பவுன் நகை, கார், 2 மோட்டார் சைக்கிள்கள் என 25 லட்சம் மதிப்புள் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இக்கொள்ளை கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இக்கும்பல் வீடுகளை நோட்டமிடும். பின்னர் திருப்பூர் ஆர்.வி.இ. நகர் பகுதியில் கொள்ளை கும்பல் தலைவன் குரு சக்திக்கு சொந்தமாக உள்ள ஒர்க்ஷாப்பில் கொள்ளை தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்.

    பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். தனிப்படை போலீசாரிடம் முதலில் கொள்ளை கும்பல் தலைவன் குரு சக்தி தான் சிக்கினார். அவரை வைத்து தான் மற்ற கொள்ளையர்களை பிடித்தனர்.

    கொள்ளையர்களில் வெங்கடேஷ், சதிஷ் குமார் ஆகியோர் மீது ஒரு சில கொள்ளை வழக்கு உள்ளது. மற்றவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

    கீதா மீதும் பல்வேறு கொள்ளை வழக்கு உள்ளது. இவருக்கு 4 கணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கொள்ளை அடிக்க இக்கும்பல் செல்லும் போது காரின் முன் பகுதியில் கீதாவை உட்கார வைத்து விடுவார்கள்.

    இதற்கு காரணம் காரை போலீசார் சோதனை செய்யும் போது பெண் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் தான் செல்கிறார்கள் என விட்டு விடுவார்கள் என்பதற்காக தான் அவரை அழைத்து சென்றுள்ளனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கவே கீதாவை உடன் அழைத்து சென்றுள்ளனர்.

    இக்கும்பல் திருப்பூர் மட்டுமின்றி வேறு எங்கும் கைவரிசை காட்டி உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×