search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேர் கைது
    X

    திருச்சியில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேர் கைது

    திருச்சியில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் தென்றல் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் இருந்த பையை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அந்த பையினுள் கத்தை கத்தையாக புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பாட்ஷா (36), தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா சபரீஷ் (26) மற்றும் திருச்சி காஜாமலை காஜா மியான் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் (34) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் கள்ள நோட்டுக்களை எங்கு வைத்து அச்சடித்தனர்? இதில் வேறு யாரேனும் தொடர்பட்டுள்ளனரா? என விசாரணை நடத்தினர். அப்போது பாட்ஷா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள வீட்டினை வாடகைக்கு எடுத்து யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க தனது குடும்பத்தினருடன் வந்து தங்கியதும் தெரியவந்தது.

    மேலும் அவர்களை கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது வீட்டினுள் கூட்டாளிகள் உதவியுடன் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி ரூ.500, 2000 நோட்டுக்களை அச்சடித்து, அதனை குறிப்பிட்ட அளவு வெட்டி எடுக்க தேவையான உபகரணங்கள் இருந்தது. இவர்கள் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே போலீஸ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருச்சி கே. சாத்தனூரை சேர்ந்த சதீஸ் குமார் (21) ஆங்கு வந்தார். இதனால் அவருக்கும் இதில் தொடர்வு உள்ளதா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரம், அவற்றை வெட்டி எடுக்கும் கட்டிங் மெசின் ஆகியவை மற்றும் 586 எண்ணிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள், 478 எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுக்கள் என மொத்தம் ரூ.14 லட்சத்து 11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் கள்ளநோட்டு பரிமாற்றும் கும்பல்களின் தொடர்பு எண்கள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளநோட்டுக்களை எளிதில் பரிமாற்றும் வகையில் வங்கியின் அடையாள ஸ்டிக்கர்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் பாட்ஷா, ராஜா சபரீஷ் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கனகராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சதீஸ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கள்ளநோட்டு பரிமாற்றும் கும்பல்கள் இவற்றினை புரோக்கர்கள் மூலமாக புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    திருச்சியில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×