search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாணாவரம் அருகே ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை
    X

    பாணாவரம் அருகே ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை

    பாணாவரம் அருகே ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடலை வாங்கமறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பனப்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பழையபாளையம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 35). ஊராட்சி செயலாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 வயதில் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் ஜெயபாலன், விவசாய நிலத்தில் நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார்.

    பாணாவரம் போலீசார் ஜெயபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயபாலனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஜெயபாலன் 21-ந் தேதியிட்டு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவருடைய வீட்டில் சிக்கியது. அதில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் ரேணுகோபால் 3.5.2018 அன்று ரூ.10 லட்சம், 5 ரூபாய் வட்டிக்கு வாங்கினார். அதற்கு அவர் வட்டியும் தரவில்லை. முதலும் தரவில்லை. மேலும் சிலருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதனால் எனக்கு தெரிந்த சிலரிடம் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கடந்த ஆண்டு ரேணுகோபாலிடம் கொடுத்தேன்.

    அவர் வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே எனது தற்கொலைக்கு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ரேணுகோபால்தான் காரணம் என்று கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாலனின் உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பாணாவரம் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று ரேணுகோபாலை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீசார் சரியான பதில் சொல்லாததால் அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ரேணுகோபால் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×