search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மும்முரம்
    X

    பொங்கல் பண்டிகையையொட்டி காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மும்முரம்

    பொங்கல் பண்டிகையையொட்டி காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் திங்கட்கிழமை தோறும் வாரசந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையை முன்னிட்டு இங்கு சிறப்பு சந்தை நடத்தப்படும்.

    போகி பண்டிகையையொட்டி காராமணிக்குப்பத்தில் சிறப்பு சந்தை இன்று அதிகாலை கூடியது. ஏராளமான கிராம மக்கள் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்து குவிந்தனர்.

    நாளை மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாடுகளுக்கு கட்டப்படும் மணிகள், வண்ணகயிறுகள் ஏராளமாக இன்று சந்தையில் விற்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் தங்களின் மாடுகளுக்கு தேவையான வண்ணக் கயிறுகள் மற்றும் மணிகளை வாங்கி சென்றனர்.

    மாட்டு பொங்கலையொட்டி அனைவரின் வீடுகளிலும் அசைவஉணவு படைப்பார்கள். இதில் பெரும்பாலானோர் கருவாடு சமைத்து படைப்பது வழக்கம்.

    இதையொட்டி இந்த சந்தைக்கு கடலூர் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அதிக அளவில் கருவாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று ஏராளமான பொதுமக்கள் சந்தையில் விற்கப்பட்ட பலவகையான கருவாடுகளை வாங்கி சென்றனர். இன்று மட்டும் ரூ.5 லட்சத்துக்கு கருவாடுகள் விற்கப்பட்டது. மேலும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் ரூ.45 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×